கோவை மாநகரின் மைய பகுதியில் அமைந்த பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், போலீஸ் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த ஒரு நபர், குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் (எஸ்.ஐ.) அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. எஸ்.ஐ. அறையில் தூக்குப்போட்டு தற்கொலை
சம்பவம் குறித்து கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியதாவது :
“உயிரிழந்தவர் ‘ராஜன்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தன்னை 25 பேர் துரத்துகின்றனர் என காவலரிடம் புகார் கூறிய நிலையில், காவலர் வெளியே சென்று பார்த்தார். எவரும் இல்லை என்பதால், காலையில் பேசலாம் என கூறி அவரை அனுப்பிவைத்தார். ஆனால், அந்த நபர் பின்னர் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, மாடிக்கு சென்று, எஸ்.ஐ. அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்” எனக் குறிப்பிட்டார்.
சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரம்
போலீசார் வெளியிட்ட சிசிடிவி காட்சிகளில், ராஜன் இரவு 11.19 மணிக்கு ஸ்டேஷனுக்குள் வருவது தெரிகிறது. அதற்கு முன், டவுன்ஹாலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. அவருடைய பாக்கெட்டில் இருந்த டைரியின் மூலம் அவரை அடையாளம் காணப்பட்டது. அவர் பேரூரை சேர்ந்த சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அறிவொளி ராஜன் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்ததும் தெரியவந்துள்ளது.
தற்கொலை சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் மற்றும் உதவி கமிஷனர் விசாரணை மேற்கொள்கின்றனர். காவலர்கள் கவனக்குறைவாக இருந்தார்களா என்பதையும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது ‘லாக்அப் டெத்’ என வழங்க முடியாது என்றும், பொதுமக்கள் நுழைய வசதியாகவே கதவு இல்லாமல் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அதிலும் மாற்றம் செய்யப்படும் எனவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம்.. தொடர்ந்து விசாரணை
இவ்வருடம் சிவகங்கை மாவட்டத்தில் காவலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு காவல் துறை சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவை ஸ்டேஷனில் இந்த தற்கொலை சம்பவம் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராஜனின் பணியிடம், கடந்த காலம் மற்றும் அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்பதைக் கண்டறிய போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.