தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான வெள்ளிமலையில் பெய்த கனமழையின் காரணமாக, மூல வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். அந்த மழைக்காலம் முடிந்த பின்னரும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் வரை ஆற்றில் மிதமான நீர்வரத்துத் தொடர்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், கடந்த டிசம்பர் மாதத்திலேயே மூல வைகை ஆற்றில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது.
இதனால், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடும் வறட்சி நிலவும் என்ற அச்சத்தில் இப்பகுதி விவசாயிகள் ஆழ்ந்திருந்தனர். விவசாயப் பணிகளும், கால்நடைகளுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியான நிலையில், நேற்று முன்தினம் இரவு வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த மழையினால் வறண்டு கிடந்த மூல வைகை ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து ஓடத் தொடங்கியது. வாலிப்பாறை, தும்மக்குண்டு, முருக்கோடை, வருஷநாடு, மயிலாடும்பாறை மற்றும் கடமலைக்குண்டு வரை ஆற்றின் இருபுறமும் தொட்டுக்கொண்டு நீர்வரத்து காணப்பட்டது.
இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக, ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் நிரம்பி வருவதோடு, சுற்றியுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் மீண்டும் நீர்வரத்துத் தொடங்கியுள்ளதால், வருஷநாடு மற்றும் கடமலை-மயிலை ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தத் தண்ணீர் வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் ஓரளவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வறட்சியைச் சமாளிக்க இந்த மழைக்கால நீர்வரத்து ஒரு பாதுகாப்பாக அமையும் என வேளாண் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

















