கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தாணுமாலயர் சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறும் தூர் வாரும் பணிகள் முறையாக இல்லாமல் நடைபெறுவதால், குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், அருகிலுள்ள குடியிருப்போரிலும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடையிலும் பெரும் பதட்டம் நிலவுகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில், மதிலின் மற்ற பகுதிகளும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக பொது மக்கள் எச்சரித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: “தூர் வாருதல் பணிகள் எந்தவித திட்டமிடலுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை பெய்துகொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய பணிகள் செய்வது முறையல்ல. இரவு நேரங்களில் வண்டல் மண் மற்றும் கற்கள் எடுக்கப்பட்டதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது துறையின் கண்காணிப்பு இல்லாமையை வெளிப்படுத்துகிறது,”
என அவர் கூறினார். அதோடு, “எவ்வளவு ஆழம் தோண்டப்பட்டது, எவ்வளவு மண் எடுக்கப்பட்டது, சுற்றுச்சுவர் ஏன் இடிந்தது என்பதற்கான முழுமையான விவரங்களை இந்துசமய அறநிலையத்துறை வெளிப்படையாக விளக்க வேண்டும்.
தவறுகள் செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார். “தொடர்ந்து மழை பெய்தால் நிலைமை மோசமடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு போர்கால அடிப்படையில் சுவர் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். அதற்காக பொறியாளர்களை கொண்டு புதிய சுற்றுச்சுவர் வடிவமைப்பு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்,” என தெரிவித்தார். அவர் மேலும், “ஒரு மாதத்தில் தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் பணிகளை முடித்து, பக்தர்கள் பாதுகாப்பாக வழிபடக் கூடிய சூழலை உறுதி செய்ய வேண்டும்,” எனக் கூறினார்.
இந்நிலையில், கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “தூர் வாருதல் பணிகள் முன்னதாக ஒப்பந்ததாரர் மூலமாக தொடங்கப்பட்டன. தற்போது ஏற்பட்ட இடிபாடுகளுக்கான காரணம் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்படுகிறது. மழை குறைந்ததும் தற்காலிக சீரமைப்புடன், புதிய மதில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்,” என தெரிவித்தனர். இந்த ஆய்வில் கழகச் செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன், குமார், நாகசாயி, குமரகுரு, குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
