சென்னை:
கடந்த சில மாதங்களாக அமலாக்க இயக்குநரகம் (ED) எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக, நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களையும், தடைகளையும் விதித்து வருகின்றன. அமலாக்கத்துறையின் அதிகார வரம்பு, நடைமுறை மற்றும் சட்டப்பூர்வ செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றன.
தேசிய ஹெரால்டு வழக்கு: ED குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
தேசிய ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றம் முக்கிய நிவாரணம் அளித்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்த மறுத்த நீதிமன்றம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகார் விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்தது.
சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையில் அல்லாது, தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். அதனால், PMLA சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது என நீதிமன்றம் விளக்கமளித்தது.
இந்த வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மட்டுமின்றி, சுமன் தூபே, சாம் பிட்ரோடா, யங் இந்தியன், டோட்டெக்ஸ் மெர்சண்டைஸ் மற்றும் சுனில் பண்டாரி ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் முறைகேடாக கைப்பற்றப்பட்டதாக ED குற்றம்சாட்டியது. இதேவேளை, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்ட வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்
மற்றொரு முக்கிய சம்பவமாக, திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டுள்ளார். அமலாக்கத்துறை வரலாற்றில், உதவி இயக்குநர் ஒருவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய சம்பவம் இதுவே முதன்முறையாகும்.
ரூ.1,000 கோடி டாஸ்மாக் மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில், மேல்நடவடிக்கைகளுக்கு தடை விதித்த நீதிமன்ற இடைக்கால உத்தரவை மீறி, ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதே இந்த அவமதிப்பு வழக்கிற்கு காரணமாக அமைந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகும் ஏன் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கடும் கேள்விகளை எழுப்பியது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திருப்பி வழங்க வேண்டும் என்றும், அவற்றின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
தொடரும் விமர்சனங்கள்
இந்த இரு சம்பவங்களும், அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் சட்ட வரம்புக்குள் உள்ளதா, நடைமுறை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார வழக்குகளில் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது நீதிமன்ற கண்காணிப்பு மேலும் தீவிரமாகும் சூழல் உருவாகி வருவதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















