சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் வைத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர், பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் இந்தியாவின் பெயரை விண்வெளி வரலாற்றில் பொறித்த பெருமையை சுக்லா பெற்றார்.
இந்தியாவிற்கு திரும்பிய பின், அவர் முதலில் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவிற்கு சென்று குடும்பத்தினருடன் சில நாட்கள் ஓய்வு எடுக்கவுள்ளார். மேலும், ஆகஸ்ட் 23-ம் தேதி டில்லியில் நடைபெறும் தேசிய விண்வெளி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
இந்தியா திரும்பும் விமானத்தில் பயணம் செய்யும் போதே, சுபான்ஷூ சுக்லா சமூக வலைதளத்தில் தனது நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“இந்தியா திரும்பும் இந்த தருணத்தில் என் இதயம் பெரும் உணர்வுகளால் நிறைந்துள்ளது. விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு முதல் முறையாக என் குடும்பம், நண்பர்கள் மற்றும் நாட்டின் மக்களைச் சந்திக்கப் போகிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கையில் முன்னேற்றம் எப்போதும் தொடர்ந்தே ஆக வேண்டும். விண்வெளியில் நான் கற்ற ஒரே பாடம் மாற்றமே நிலையானது; அது வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு சுபான்ஷூ சுக்லா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
