திண்டுக்கல் மாவட்டம் SBM பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அரசு துறைகள் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் காட்சி அரங்குகள் அமைத்திருந்தன. இந்த அரங்குகளில், அரசின் நலத்திட்டங்கள், கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள், சமூக நலத் துறையின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகள் மாணவர்களின் அறிவை விரிவுபடுத்தின. நிகழ்ச்சியின் இரண்டாம் அம்சமாக, “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்களின் தமிழ் பெருமித உரை நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழ் இலக்கிய மரபு, கலாச்சாரப் பெருமை மற்றும் உலகளாவிய தமிழ்மொழி வளர்ச்சி குறித்த பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்காக கீழடி அகழ்வாய்வு, இராஜேந்திர சோழன் வரலாறு, தமிழின் தொன்மை, மற்றும் உயர்கல்வியின் வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக “செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்வோம்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியவர் அறிஞர் பொன்ராஜ். அவர் உரையாற்றுகையில், “இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) தவிர முடியாத நிலைக்கு வந்துள்ளது. ஆனால் அதை மனித நலனுக்காக எவ்வாறு மாற்றுவது என்பது நம் தலைமுறையின் பொறுப்பு. தமிழின் ஆற்றலும், செயற்கை நுண்ணறிவின் திறனும் இணைந்தால், நம் சமூகத்தை நவீனத்திற்கும், நன்மைக்கும் வழிநடத்தலாம்,” என்று மாணவர்களிடம் வலியுறுத்தினார்.
“செயற்கை நுண்ணறிவு நம் வாழ்வில் ஏற்படுத்தும் தீமைகளை, கல்வி மற்றும் சிந்தனையால் நன்மையாக மாற்றி வழிநடத்துவது தமிழர் பாங்கு. தொழில்நுட்பத்தின் ஆற்றலை எதிர்கொண்டு அதனை மனிதநேயம் நிறைந்த முறையில் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றும் குறிப்பிட்டார். நிகழ்வில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஆவலுடன் பங்கேற்று உரைகளையும் காட்சிகளையும் கவனமுடன் கேட்டனர்.பேச்சுக்குப் பின் நடைபெற்ற வினா-விடை நிகழ்வில், சிறந்த வினாக்களை எழுப்பிய ஐந்து மாணவர்களும்,
“தமிழ் பெருமிதம்” நூலில் இருந்து தனக்குப் பிடித்த தலைப்பில் சிறப்பாகப் பேசிய மற்ற ஐந்து மாணவர்களும் சிறப்பு பரிசுகளை பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. இரா. ஜெயபாரதி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. கேலின், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மற்றும் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர் இ. சேனாவரையன், SBM பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் விஜயசக்ரவர்த்தி, திண்டுக்கல் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமி, அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள்,
மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்நிகழ்வின் நோக்கம் மாணவர்களுக்கு தமிழின் பண்பாட்டு மரபு மற்றும் தொழில்நுட்ப அறிவு இணைந்த கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
தமிழ்மொழி வளர்ச்சியும், தொழில்நுட்ப திறனும் இணைந்தால் புதிய தலைமுறைக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதை இந்நிகழ்ச்சி வலியுறுத்தியது.



















