கோவை :
கோவையில் கல்லூரி மாணவி மீது நடைபெற்ற கொடூரக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய தகவல்கள் வெளிச்சம் பார்த்துள்ளன.
மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவை கலைக்கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். தனியார் விடுதியில் தங்கி வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது நண்பருடன் காரில் சுற்றுலா சென்றுள்ளார். இரவு நேரத்தில் விமான நிலையம் அருகிலுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கார் நிறுத்தி பேசியபோது, மூன்று மர்ம நபர்கள் அவர்களை அணுகி மிரட்டியதாக கூறப்படுகிறது.
தப்பிச் செல்ல முயன்ற இளம் ஜோடியை குற்றவாளிகள் தடுத்து நிறுத்தியதோடு, காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து, ஆண் நண்பரை கத்தியால் தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார். பின்னர், மாணவியை புதர் பகுதியில் இழுத்துச் சென்று மூவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நள்ளிரவு 2 மணியளவில் மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், போலீசாரிடம் அழைத்து தகவல் தெரிவித்ததால், பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது, மாணவி பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவைத் தட்டி உதவி கேட்டது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியில் இருந்த மாணவிக்கு அங்கிருந்த மக்கள் ஆடை வழங்கி, தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், காவல்துறையினர் அங்கு சென்று மாணவியை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மனிதநேயத்துடன் செயல்பட்ட பிருந்தாவன் நகர் மக்கள், அந்த மாணவியின் உயிரைக் காக்க முக்கிய பங்கு வகித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய தவசி, கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
