கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தை அதிர்ச்சியடையச் செய்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM), கொல்கத்தா வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில், “கவுன்சிலிங் அளிக்கும் பெயரில் தன்னை ஆண்கள் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன. பின்னர் சுயநினைவை இழந்தேன். திரும்பக் கிடைத்தபோது, விடுதிக்குள் இருந்ததையும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும் உணர்ந்தேன். மிரட்டல்களும் சந்திக்க நேரிட்டது,” என கூறியுள்ளார்.
இது தொடர்பாக, புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் கல்வி நிலையத்துக்குள்ளேயே நடந்துள்ளதால், மாணவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த தகவல்களும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
மாணவியின் தந்தையின் பதில்
சம்பவம் தொடர்பாக பேசிய மாணவியின் தந்தை, “எனது மகள் வெள்ளிக்கிழமை இரவு 9.34 மணிக்கு ஆட்டோவில் இருந்து தவறி விழுந்ததாக தகவல் வந்தது. போலீசார் SSKM மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் அனுமதித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என அவர் தன்னிடம் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என தெரிவித்துள்ளார்.
மாணவியின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் இல்லை என்றும், அவர் தொடர்ந்து சுயநினைவில் இல்லை என்பதும் அவரது தந்தை கூறியுள்ளார். மாணவியின் சுயவிவரமும் மருத்துவ அறிக்கைகளும் போலீசாரால் கண்காணிக்கப்படுகின்றன.
இந்நிலையில், சம்பவம் உண்மையாக நடந்ததா அல்லது வேறுவிதமான காரணமா என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.