மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் அடுத்தடுத்த உத்தரவுகளை மீறித் தடை உத்தரவு பிறப்பித்த திராவிட மாடல் தி.மு.க. அரசின் மீது, இந்து அமைப்புகளும் எதிர்க்கட்சியினரும் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை அரசின் கூட்டணி நிர்ப்பந்தம் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை நோக்கிய பிடிவாதமான செயல் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தனி நீதிபதி முதலில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டபோது, தி.மு.க.வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ‘கலவரம் ஏற்படும்’ என்று உடனடியாகப் பொய்க் கதை கூறி எதிர்ப்பு தெரிவித்தார். கூடவே, காங்கிரசும் தங்களது சிறுபான்மையின ஓட்டு வங்கிக்கு எந்தவிதப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில், இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியது. இந்த கூட்டணி நிர்ப்பந்தம் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளைக் கருத்தில் கொண்டு தான், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் முதலில் தி.மு.க. அரசு பின்வாங்கியது என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இதையடுத்து, மனுதாரரே தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் இரண்டாவதாக உத்தரவிட்ட நிலையிலும், அதனை ஏற்க மனமில்லாத அரசு, மாவட்ட ஆட்சியர் வழியாக 144 தடை உத்தரவு பிறப்பித்து, இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பையும் ஏற்றுக் கொண்டது. பொதுவாகவே, தி.மு.க. அரசு இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்ற கருத்து உள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல, தர்கா நிர்வாகமே இந்த வழக்கில் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும், வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு தி.மு.க. அரசு பிடிவாதமாக இந்துக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுகளை அரசு அலட்சியப்படுத்துவதுடன், இத்தகைய செயல்கள் மதுரை போன்ற ஆன்மிக மண்ணில், தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்து அமைப்பினர் எச்சரிக்கின்றனர். மேலும், மத நல்லிணக்கம் நிலவும் மதுரையில் தேவையில்லாமல் இந்த விவகாரத்தைக் கிளப்பி, பதட்டத்தை ஏற்படுத்தியது தி.மு.க. அரசுதான் என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இச்சம்பவம் தற்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மட்டுமின்றி, தமிழக அரசின் தேர்தல் அரசியல் சார்ந்த விமர்சனமாகவும் உருவெடுத்துள்ளது.
