கோவை : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதிவாரியாக மக்களுடன் சந்தித்து வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இன்று பொள்ளாச்சியில் விவசாயிகள், தொழில்துறை சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நினைவுகூர்ந்து பேசினார். அவர், “ஒரு மாவட்டத்தை உருவாக்க ரூ.500 கோடி தேவை. நான் முதல்வராக இருந்தபோது 6 மாவட்டங்களை அறிவித்தேன். இந்த அரசு பணமின்றி புதிய மாவட்டங்களை உருவாக்கவில்லை. அதிமுக ஆட்சியில் 31 தடுப்பணைகள் கட்டப்பட்டது. அத்திக்கடவு – அவிநாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினோம்” என குறிப்பிட்டார். மேலும், கள் இறக்க அனுமதி தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒரு விவசாயி “அதிமுக ஆட்சியில் கள் இறக்க அனுமதி ஏன் வழங்கப்படவில்லை?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விளக்கம் அளிக்க முயன்றனர். ஆனால் விவசாயி தொடர்ந்து வற்புறுத்தியதால், எடப்பாடி பழனிசாமி சற்று கடுப்படைந்தார்.
அவர், “உங்க பிரச்சனையை மட்டும் பார்க்க முடியாது. இது தமிழ்நாடு. 8 கோடி மக்களின் பிரச்சனைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் பொதுவாகவே பேச வேண்டும். முதலமைச்சரோ, எதிர்க்கட்சித் தலைவரோ தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. உங்களுக்கு கஷ்டம் இல்லை என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மற்றவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது. கருத்து சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.