மாநில அளவிலான கேலோ இந்தியா மகளிர் டென்னிஸ் பந்து கிரிக்கெட்

கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் ஆகியவை இணைந்து, மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ (Khelo India) திட்டத்தின் கீழ் மாநில அளவிலான மகளிர்க்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளைச் சிறப்பான முறையில் நடத்தின. மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மிகச்சிறந்த 12 மாவட்ட அணிகள் பங்கேற்றுத் தங்களது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தின. விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டியின் தொடக்க விழாவிற்கு, சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுதாகர் தலைமை வகித்தார்.

கல்லூரியின் முதல்வர் சுகுணா மற்றும் சூர்யா மருத்துவமனை பெண்கள் நல மருத்துவர் புவிதா சுதாகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றிப் போட்டிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டிகள் அனைத்தும் லீக் (League) அடிப்படையில் நடத்தப்பட்டன. தொடக்கச் சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அணிகளுக்கு இடையே சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போர் நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய நாமக்கல் மாவட்ட அணி, கன்னியாகுமரி அணியைத் வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதலிடத்தைத் தட்டிச் சென்றது. கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளின் அடிப்படையில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்ட அணிகள் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டன.

வெற்றி பெற்ற வீராங்கனைகளைப் பாராட்டிப் பரிசளிக்கும் விழா மைதானத்தில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் பைக்காரா மண்டல வன அதிகாரி மஞ்சு தாஷினி மற்றும் கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத் தலைவர் சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்குச் சுழற்கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தனர். அப்போது பேசிய வன அதிகாரி மஞ்சு தாஷினி, கல்விக்கு இணையாக விளையாட்டுத் துறையிலும் பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்றும், இத்தகைய மாநில அளவிலான போட்டிகள் தேசியப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒரு நுழைவு வாயில் என்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகச் செயலாளர் ஞானவேல், பொருளாளர் மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தப் போட்டிகளைக் கண்டு வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டிகள், தமிழகத்தில் வளர்ந்து வரும் இளம் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒரு மிகச்சிறந்த களமாக அமைந்தது என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version