தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய ஏமாற்று வேலையைச் செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு, இப்போது தேர்தல் நெருங்குவதால் புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவோம் என்று கூறினார்கள். ஆனால், இப்போது ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (UPS) என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்து, தந்திரமாக அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த அரசின் உண்மை முகத்தை அரசு ஊழியர்கள் விரைவில் உணர்வார்கள்,” என்று பேசினார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது கூடுதலாக 17 லட்சம் பேரை இணைத்திருப்பது, மக்கள் மீதான அக்கறையினால் அல்ல, வரும் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகத்தான் என்றும் அவர் விமர்சித்தார். திமுக ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுவதாகக் குறிப்பிட்ட அவர், “நகராட்சி நிர்வாகத்துறையில் 800 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சுய உதவிக் குழுக்களை ஆய்வு செய்ய 44 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, தேர்தலுக்கு முன்னதாகப் பணத்தைச் சுருட்டுவதற்கான ஒரு வழியாகும். ஜல்லி மற்றும் எம்-சாண்ட் கிரஷர் உரிமையாளர்களிடம் தலா 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு திமுகவினர் மிரட்டுகிறார்கள். கோவை மாவட்டத்தில் மட்டும் முதற்கட்டமாக நான்கரை கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்குத் துணை போகும் அதிகாரிகள் மீது அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று சாடிய அவர், பொக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் 6,999 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என்றார். “திமுக என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. கருணாநிதி, ஸ்டாலினைத் தொடர்ந்து உதயநிதி, இன்பநிதி என ஒரு குடும்பமே 8 கோடி மக்களைச் சுரண்டப் பார்க்கிறது. திமுகவில் மூத்த தலைவர்களுக்குக் கூட உரிய அங்கீகாரம் இல்லை. மிசாவில் பாதிக்கப்பட்ட துரைமுருகனுக்குக் கிடைக்காத வாய்ப்பு, கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று குடும்ப அரசியலைச் சாடினார்.
சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் திரண்டிருந்த கூட்டத்தைக் கண்டு உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். 2026-ல் தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்த எந்தக் கொம்பனாலும் முடியாது. நாங்கள் கொண்டு வந்த தலைவாசல் கால்நடைப் பூங்கா போன்ற பல நற்பணித் திட்டங்களை முடக்கிய திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்,” என்று சூளுரைத்தார்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, திமுக, காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் பலத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
