விடியா ஆட்சியில் விடைபெறும் ஸ்டாலின்: அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டுக்கு ரூ. 10,000 உதவித்தொகை – எடப்பாடியார் அதிரடி முழக்கம்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தின் 73-ஆம் நாள் பிரச்சாரம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் அனல் பறக்க நடைபெற்றது. அந்தியூர் அண்ணா மடுவு அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஊழல் பட்டியல் மற்றும் விலைவாசி உயர்வை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாகச் சாடினார். முன்னதாக பவானி வட்டம் திப்பி செட்டிபாளையத்தில் கரும்பு விவசாயிகளைச் சந்தித்த அவர், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தார்.

விவசாயி என்ற உணர்வோடு அதிமுக அரசு எப்போதும் செயல்படும் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, 2016 முதல் 2021 வரை இரண்டு முறை பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ததுடன், 24 மணிநேர மும்முனை மின்சாரத்தையும் தங்குதடையின்றி வழங்கியதாகத் தெரிவித்தார். ஆனால், தற்போதைய திமுக அரசு அதை ஷிஃப்ட் முறையாக மாற்றி விவசாயிகளை வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், “ஏரி, குளம், குட்டைகளைத் தூர்வாரக் கொண்டு வரப்பட்ட குடிமராமத்துத் திட்டத்தை முடக்கிய இந்த விவசாய விரோத அரசு நமக்குத் தேவையா? மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகள் வண்டல் மண்ணை விலையில்லாமல் அள்ளிக்கொள்ள அனுமதி வழங்கப்படும்” என்று அவர் உறுதியளித்தார். குறிப்பாக, சேலம் தலைவாசலில் 1,000 கோடியில் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை திமுக அரசு முடக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக ஆட்சியில் கலப்பினப் பசுக்கள் வழங்கப்பட்டு, பால் உற்பத்திப் புரட்சி ஏற்படுத்தப்படும் என்றார்.

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுவிட்டதாகக் கூறி, அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலத்து விலைப் பட்டியலை அவர் ஒப்பிட்டுக் காட்டினார்: மின்கட்டணம் 57 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல் ஆகியவற்றின் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளதால் ஏழை மக்கள் வீடு கட்டுவது என்பது கனவாகவே மாறிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

“மக்களிடம் செல்வாக்கை இழந்ததால் தற்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் பார்க்கிறார் ஸ்டாலின். ஆனால், அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்; இதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து எங்களது செல்வாக்கைப் பயன்படுத்திப் பெறுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி அதிரடி வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டும் உருப்படியான திட்டங்கள் எதுவும் வரவில்லை என்றும், அதிமுக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்த சாதனையை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் மார்தட்டினார்.

Exit mobile version