எஸ்.எஸ்.ஐ. படுகொலை : “முதல்வருக்கு எச்சரிக்கை மணி” – அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணியாகும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பது குற்றவாளிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இருந்தும் இக்கொடூர சம்பவம் நிகழ்வது ஏன்? இது சமூகத்தின் அழிவு பாதையை காட்டும் ஒரு முக்கிய அறிகுறி. போதைப்பொருட்களின் அதிகபட்ச பயன்பாடு, சில்லறை மதுக்கடைகள், அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தின் முடிவுகள் – இவை அனைத்தும் சட்ட ஒழுங்கை சீர்கேட்படுத்தும் பங்கு வகிக்கின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போது கீழ்மட்ட அதிகாரிகள் உட்பட அனைத்து போலீசாரும் தொழில்நுட்ப ரீதியாக ஆயுதம் ஏந்த வேண்டிய காலம் இது. டேசர் துப்பாக்கி, பாடி கேமரா, கைத்துப்பாக்கி, ரோந்து வாகனங்கள் போன்றவைகளை அதிகரித்து, காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். இது முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும்,” என கூறினார்.

“பாதுகாப்பில்லாத நிலைதான் இன்று நிலவுகிறது” – நயினார் நாகேந்திரன்

இதேபோல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், “பொதுவெளியில் மதுபோதையில் தவறாக நடக்கும் செயற்பாடுகளும், போலீசாரைப் போலவும் பொதுமக்களைப் போலவும் கொலை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் பெருகும் குடிபழக்கத்தால் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை. தங்கள் நிர்வாகக் கோளாறுகளால் உயிரிழப்போருக்கு இழப்பீட்டு தொகை அளித்து மக்கள் கவனத்தை மாற்றும் தப்புக்கணக்கு இனி செல்லாது,” என தெரிவித்தார்.

மேலும், “சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத திமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். மக்கள் எதிர்வரும் தேர்தலில் தங்கள் முடிவை சொல்லி தருவார்கள்,” என அவர் கூறினார்.

Exit mobile version