75 வயது மூதாட்டிக்கு மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ பொருத்திய ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு, மிகக் குறைந்த இதயத்துடிப்புப் பிரச்சினைக்காக, நுண்துளை இரத்தக் குழாய் வழியாக (Keyhole Procedure) மிகவும் சிறிய ஈயமற்ற பேஸ்மேக்கரை (Leadless Pacemaker) வெற்றிகரமாகப் பொருத்தி, தஞ்சை ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் டெல்டா மண்டலத்தில் மருத்துவச் சாதனை படைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர், திடீர் இதய வலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாகத் தஞ்சை ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த இதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன், அந்தப் பெண்மணிக்கு இதயத் துடிப்பு மிகக் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதில், இதயத்துக்கு ரத்தம் வழங்கும் ரத்த நாளங்கள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்குத் தற்காலிக இருதய பேஸ்மேக்கர் (TPI) பொருத்தப்பட்டு, மூதாட்டியின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதயத்தின் சீரான செயல்பாட்டை நிரந்தரமாக்க, ஸ்ரீகாமாட்சி மருத்துவமனையின் இதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர் ஒரு சிக்கலான சிகிச்சையை மேற்கொண்டனர். Single Chamber Leadless Pacemaker எனப்படும், பாரம்பரிய பேஸ்மேக்கரை விட மிகவும் சிறிய, ஈயமற்ற (Leadless) நிரந்தர பேஸ்மேக்கர் கருவியைத் தேர்ந்தெடுத்தனர்.

இந்தக் கருவி மிகத் துல்லியமாகவும், குறுகிய நேரத்திலும் இரத்தக் குழாய் வழியாக (நுண்துளை சிகிச்சை) இதயத்துக்குள் பொருத்தப்பட்டது இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பெண்மணிக்கு சுவாச நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இதயத் துடிப்பு சீராகி, நலமுடன் வீடு திரும்பினார். டெல்டா மாவட்டங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதய சிகிச்சை அளிப்பதில் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை முன்னோடியாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிகிச்சையின்போது, இதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன், மருத்துவமனை மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன், மற்றும் இதய மருத்துவம் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் டாக்டர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version