
கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், அதன் தலைவரான நடிகர் விஜய் பேசுகையில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக, மத்திய அரசு கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இந்தப் பேச்சு தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜேதா ஹேரத்திடம், விஜய்யின் கருத்து குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமான தீவு. அது ஒருபோதும் மாறப்போவதில்லை. தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை அளிப்பார்கள். அதுபோலத்தான் கச்சத்தீவு பற்றியும் பேசுகிறார்கள். இது முதல்முறை அல்ல; ஏற்கெனவே பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரம் பேசப்பட்டுள்ளது. தேர்தல் மேடைகளில் கூறுவதால் எதுவும் மாறப்போவதில்லை.” “நடிகர் விஜய் தேர்தல் மேடையில் பேசியதைப் பார்த்தேன். அதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானதுதான். எந்தவொரு ராஜதந்திர நடவடிக்கைகளுக்காகவும் கச்சத்தீவை இந்தியாவுக்கு நாங்கள் வழங்க மாட்டோம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றேன்.” “இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால், அதைக் குறித்துக் கவனம் செலுத்தலாம். அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்று திட்டவட்டமாகக் கூறினார். 1974-ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமாக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மீனவ அமைப்புகள் தொடர்ந்து கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில், விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.