இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா.பிருந்தாதேவி அவர்கள் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அக்டோபர் 28-ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்டத் தேர்தல் அலுவலர் இரா.பிருந்தாதேவி அவர்கள், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாழிக்கல்பட்டி, அம்பேத்கர் நகர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள 3,264 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தங்களுக்கான வாக்குச்சாவடிகளில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களுக்கும் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி வருகின்றனர்.
ஆய்வின்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், இந்தப் பணிகளைச் செம்மைப்படுத்தும் வகையில் கீழ்க்கண்ட முக்கிய அறிவுறுத்தல்களை ஆட்சியர் வழங்கினார்:
நீக்க விவரங்கள்: சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களில் நிரந்தரமாகக் குடிபெயர்ந்த வாக்காளர்கள் மற்றும் இறந்து போன வாக்காளர்களின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முகவர்கள் மூலம் அறிந்து கொண்டு உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.படிவம் பெறுதல்: வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களைப் பெற வரும் தேதியினை முன்கூட்டியே வாக்காளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். உறுதி செய்தல்: அனைத்து வாக்காளர்களிடமிருந்தும் கணக்கீட்டுப் படிவங்கள் பெறுவதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா.பிருந்தாதேவி அவர்கள் தெரிவித்தார்.
