தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மாநிலம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளர் குல்தீப் நாராயண் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய சிறப்புப் பார்வையாளர் குல்தீப் நாராயண், வரைவு வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள், பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் விவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். “எந்தவொரு தகுதியுள்ள வாக்காளரும் விடுபடாத வகையில், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் அனைவரையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். செம்மையான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய நான்கு நாட்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் வாயிலாக இதுவரை ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 7,369 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெயர் சேர்க்கைக்கான (படிவம் 6) விண்ணப்பங்களே அதிக அளவில் குவிந்துள்ளன. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதை இப்புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் முதியோர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடங்கிய இந்தப் பேரணியை சிறப்புப் பார்வையாளர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது இன்றும், நாளையும் (11.01.2026) உதகை மற்றும் கூடலூர் சட்டமன்றத் தொகுதிகளின் முக்கியப் பகுதிகளான தாவணெ, கக்குச்சி, காந்தல், நடுவட்டம் மற்றும் தேவர்சோலை வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, வருவாய் கோட்டாட்சியர்கள் டினு அரவிந்த், குணசேகரன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், உதகை மற்றும் குன்னூர் நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் தனி வட்டாட்சியர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ் மற்றும் சமூக நல அலுவலர் பிரவீணா தேவி ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தனர்.
















