வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: தமிழக அரசியலில் சூடு!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை (2026) முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பணி டிசம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாகவும் (https://voters.eci.gov.in-ல்) விவரங்களைப் பூர்த்தி செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திருத்தப் பணி அவசர கதியில் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் குழப்பங்களை ஏற்படுத்த மத்திய பாஜக அரசின் ‘கைப்பாவையாக’ தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று (நவம்பர் 12, 2025) புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. முத்துராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கவிதை பித்தன், பெரியண்ணன் அரசு, கார்த்திக் தொண்டைமான், உதயம் சண்முகம், மாநகர பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட கூட்டணி கட்சிகளான மதிமுக (மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி), இந்திய கம்யூனிஸ்ட் (செங்கோடன்), இந்திய முஸ்லிம் லீக் (அசுரப் அலி), மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுத்தும் நோக்கில் பணி மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. திமுக சார்பில் இந்தப் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக திமுக கூட்டணி நடத்திய போராட்டத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிலை அளித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் இந்தப் போராட்டம் எதற்காக என்று நாட்டு மக்களுக்குப் புரியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இறந்து போனவர்கள், இடம் பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, தகுதியான நபர்களைச் சேர்ப்பது தேர்தல் ஆணையத்தின் தார்மீக கடமையாகும்.” “ஏற்கனவே இதுபோன்று நியாயமாக எட்டு முறை வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.” “இந்த திருத்தப்பட்டியல் வெளிச்சத்திற்கு வந்தால் திமுக வெற்றி பெற முடியாத கவலை ஸ்டாலினுக்கு ஒட்டி உள்ளதால் அறிக்கை வெளியிடுகிறார்.” “சிறப்பு திருத்தம் குறித்து தேர்தல் ஆணையர் மீது பழியைச் சுமத்தி, புதிய பார்முலாவை திமுக கையில் எடுக்க நினைக்கிறார்கள்.” மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைக்காலம் மற்றும் பண்டிகைகளைக் காரணம் காட்டி மக்கள் மீது கரிசனம் காட்டுவதாகக் கூறுவது குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். “தமிழ்நாட்டில் வீட்டுப் பெண்கள் வெளியே சென்று நிம்மதியாக வீட்டுக்குள் வர முடியவில்லை. மதுக்கடைகள் அதிகரித்து, 10 வயது சிறுவர் முதல் முதியோர் வரை குடிகாரராக மாற்றிவிட்டதால் தாய்மார்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த உண்மை நிலைமையை முதலமைச்சர் கவனிக்க வேண்டும்” எனக் குற்றம்சாட்டினார்.

Exit mobile version