வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக கட்சியில் முக்கியமான பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வேட்பாளர் தேர்வில், எம்.பி. கனிமொழி முன்னிலை வகிக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சியை தொடர வேண்டுமென்பது திமுகவின் நோக்கம். இதற்காக மாநிலம் முழுவதும் கட்சி வலுவாக செயல்பட்டு வருகிறது. இதே நேரத்தில், அதிமுக கூட்டணியும் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் வேட்பாளர் அறிவிப்புகளைத் தொடங்கியுள்ளன. பாஜகவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுகவும் மாநிலத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
அந்த வகையில், தென் மண்டல பொறுப்பாளராக உள்ள கனிமொழி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வுப் பொறுப்பை ஏற்றுள்ளார். இதனால், தென் மாவட்ட திமுகவில் கனிமொழியின் தாக்கம் மேலும் வலுவாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில் உள்கட்சி முரண்பாடுகள் நிலவுகின்றன. இதனால், தகுதியானவர்களையும் மக்கள் ஆதரவு பெற்றவர்களையும் தேர்வு செய்ய கனிமொழிக்கு திமுக தலைமை சிறப்பு உத்தரவு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
“ஆதரவாளர்களோ, நெருக்கமானவர்களோ அல்ல, வாக்காளர் செல்வாக்கு கொண்டவர்கள் மட்டுமே வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டும்” என்ற நிபந்தனையும் தலைமை தெளிவாக கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விஜய்யின் தவெக கட்சியும் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடவுள்ளதால், வாக்குகள் பிளவுபடும் வாய்ப்பு உள்ளதாக கருதி திமுக வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக கனிமொழியிடம் தனிப்பட்ட ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த முக்கிய பொறுப்பால், அவரின் ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதே நேரம், சில மூத்த நிர்வாகிகள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த கனிமொழி, இப்போது வேட்பாளர் தேர்விலும் முக்கிய பங்காற்றும் நிலையில் இருப்பது, அவரின் கட்சி செல்வாக்கை மேலும் உறுதி செய்கிறது.

















