தமிழக அரசியலின் வெற்றித் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் மேற்கு மண்டலத்தில், குறிப்பாக கோவையில், பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இடையே இப்போதே தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுள்ளது. நீண்டகாலமாக அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தைத் தகர்க்க, திமுக தலைமை தனது ‘வியூக நாயகன்’ செந்தில்பாலாஜியைப் பொறுப்பாளராகக் களமிறக்கியுள்ளது. இதனால் கோவையில் மீண்டும் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கம் தொடருமா அல்லது செந்தில்பாலாஜியின் வியூகம் வெல்லுமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கிறது.
இந்தச் சூழலில், கோவையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆற்றிய உரை, அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், “கோவை எப்போதும் எடப்பாடியார் மற்றும் எஸ்பிவி-யின் கோட்டை; இதை யாராலும் அசைக்க முடியாது” எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால், அனைவரது பேச்சையும் பொறுமையாகக் கேட்ட வேலுமணி, தனது உரையில் யதார்த்த அரசியலைப் புட்டுப் புட்டு வைத்தார்.
“கோட்டை என்று நீங்கள் பெருமையாகச் சொல்கிறீர்கள், ஆனால் அந்தக் கோட்டையில் ஓட்டை போட ஒரு ஆள் (செந்தில்பாலாஜி) கையில் சம்மட்டியுடன் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்” என எச்சரித்த வேலுமணி, திமுகவினரின் தேர்தல் கால உத்திகளைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார். மேலும், “திமுகவினர் வெளியே பார்க்கும்போது வேலை செய்யாதது போல் தெரிந்தாலும், உள்ளுக்குள் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடிப்பார்கள். அவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் பணம், பரிசுப் பொருட்கள் என எதை வேண்டுமானாலும் கொடுத்து மக்களைத் திசைதிருப்ப முயல்வார்கள். எதிரியை நாம் முந்தவிடக்கூடாது” எனத் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார்.
வேலுமணியின் இந்தப் பேச்சு, திமுகவின் தேர்தல் பணிகளை அவர் மறைமுகமாகப் புகழ்கிறாரோ என்ற ஐயத்தை ஒருதரப்பு நிர்வாகிகளிடம் ஏற்படுத்தியது. எனினும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், “ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும், அவர்கள் கையாளும் உத்திகளையும் எதிர்கொள்ள வேண்டுமானால், அதிமுக தொண்டர்கள் சோர்வின்றிச் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பதற்காகவே அண்ணன் இப்படி ஒரு ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுத்துள்ளார்” என விளக்கமளித்தனர். செந்தில்பாலாஜியின் வருகைக்குப் பிறகு கோவையில் நிலவும் அரசியல் பதற்றத்தை வேலுமணியின் இந்தப் பேச்சு அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது.
