“தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை :
தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு, நாட்டிலேயே முன்னணி மாநிலமாக உருவெடுத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர், “இந்த மாநாடு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகே தொடங்கப்பட்டது. இன்று அது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது” என்று கூறினார்.

மேலும்,“தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் கலைஞர். மாநிலத்தின் முதல் ஐடி கொள்கையை கொண்டு வந்ததும் அவரே. இன்று தகவல் தொழில்நுட்பம் தமிழ்நாட்டின் மைய வளர்ச்சி துறையாக மாறியுள்ளது” என அவர் நினைவுகூர்ந்தார்.
தகவல் தொழில்நுட்பம் வெறும் பொருளாதார வளர்ச்சிக்கான கருவி அல்ல, சமூக முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

“அறிவியல் சிந்தனையும், சமத்துவ அணுகுமுறையும் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை. தொழில்நுட்பத்தின் பயன், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும்” என்றார். உலகளாவிய திறன் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக குறிப்பிட்ட முதல்வர், “மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவின்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுவே பதில். திறமையான மனித வளமே இந்த வளர்ச்சியின் முக்கிய காரணம்” என்று தெரிவித்தார்.

Exit mobile version