தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் முன்விரோதம் காரணமாகக் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சரவணன் என்பவரது மகன் சாய்ஹரிஷ் (20). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, சாய்ஹரிஷ் மலைமேல் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தேவதானப்பட்டி சுடுகாடு பாதை வழியாக அவர் சென்றபோது, எதிரே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த பெரியகுளம் கீழவடகரை மற்றும் கரட்டூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய நான்கு சிறுவர்கள், சாய்ஹரிஷ் மீது மோதுவது போலச் சென்றுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் குறித்து சாய்ஹரிஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த நான்கு சிறுவர்கள் குறித்தும் எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சிறுவர்கள், சாய்ஹரிஷ் மீது கடும் முன்விரோதம் கொண்டு அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக, இப்பிரச்சினை குறித்துச் சமாதானம் பேசலாம் எனச் சாய்ஹரிஷை வரவழைத்துள்ளனர். இதனை நம்பிச் சென்ற சாய்ஹரிஷை, நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டி அண்ணாநகர் காலனி பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்தச் சிறுவர்கள், அங்கு தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த சாய்ஹரிஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி. நல்லு மற்றும் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த நான்கு சிறுவர்களையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான சிறுவர்கள் அனைவரும் சட்டப்படி மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் எவ்வாறு வன்முறையாக மாறுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது. தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் தேவதானப்பட்டி வடக்குத் தெரு மற்றும் பெரியகுளம் கரட்டுத் தெரு ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் ஒருவரின் உயிர் பறிபோன சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
