சமூக நல்லிணக்கமா அல்லது ஒருதலைப்பட்ச நடவடிக்கையா? திருப்பரங்குன்றம் பதற்றம்

மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றத்தில் நேற்று ஒரு மாறுபட்ட சூழல் நிலவியது. திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூண் விவகாரம் தொடர்பாகப் பக்தர்கள் செல்ல ஏற்கனவே போலீஸார் தடை விதித்துள்ள நிலையில், சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மலையில் உள்ள தர்காவிற்கு நான்கு இஸ்லாமியர்களை போலீஸார் அனுமதித்தனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. “நீதிமன்ற உத்தரவு இருந்தும் தீபத்தூணில் தீபம் ஏற்ற எங்களை அனுமதிக்காத போலீஸார், எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் இஸ்லாமியர்களை மட்டும் எப்படி அனுமதிக்கலாம்?” என உள்ளூர் குடியிருப்போர் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள், கார்த்திகை தீபம் முதல் தற்போது வரை தங்கள் வீடுகளுக்குச் செல்லக் கூட இரும்புத் தடுப்புகளைக் கடந்து, கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே செல்ல வேண்டியிருப்பதாக வேதனை தெரிவித்தனர். “எங்கள் மலையில் நாங்கள் சுவாமி கும்பிடக்கூட எங்களுக்கு உரிமை இல்லாமல் போய்விட்டது, எங்களை ஏதோ குற்றம் செய்தவர்களைப் போல போலீஸார் நடத்துகின்றனர்” என அவர்கள் குற்றம் சாட்டினர். உதவி கமிஷனர் சசிபிரியா தலையிட்டு, இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கம் தான் என்று சமாதானப்படுத்த முயன்ற போதிலும், வழிபாட்டு உரிமையில் பாகுபாடு காட்டப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

கள நிலவரத்தில் நிலவும் சில முரண்பாடுகள் வழிபாட்டு உரிமை குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளன. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவிற்குச் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்குப் போலீசார் அனுமதி அளித்த அதே வேளையில், தீபத்தூணில் தீபம் ஏற்றத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகப் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், உள்ளூர்வாசிகள் தங்கள் சொந்த ஊரிலேயே இரும்புத் தடுப்புகளுக்குள் கைதிகள் போல் நடத்தப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version