ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்மினி வசந்த், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “ரஜினிகாந்த், சல்மான் கான் போன்ற பல பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றிய முருகதாஸ், அந்த பட்டியலில் என்னையும் சேர்த்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி” என தெரிவித்தார். மேலும், முருகதாஸ் பெயரில் தந்தையின் பெயரும் இருப்பதாகக் கூறிய அவர், “என் தந்தைக்கு ரமணா படம் மிகவும் பிடிக்கும். அவர் இன்று இருந்திருந்தால் இந்த தருணத்தில் மகிழ்ந்திருப்பார்” என உணர்ச்சி பொங்கக் கூறினார்.

இந்நிலையில், விஜய் நடித்துள்ள ‘G.O.A.T’ படத்தில் இடம்பெற்ற, தன்னிடம் துப்பாக்கி கொடுக்கும் காட்சி குறித்தும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்தார். அந்த காட்சியை பாராட்டியவர்கள் பலர் இருப்பதாகச் சொன்ன அவர், “விஜய் அண்ணன் எப்போதும் ‘நல்லா பண்ற… இன்னும் நல்லா பண்ணு’ என ஊக்குவிப்பார். அந்த காட்சியையும் நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன்” என்றார்.
அதே நேரத்தில், “இவர் அடுத்த தளபதியா? குட்டித் தளபதி, திடீர் தளபதி…” என சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்ததை குறிப்பிட்ட அவர், “நான் அப்படி நினைக்கும் வகையிலானவர் இருந்திருந்தால், விஜய் அண்ணன் துப்பாக்கி கொடுத்து இருக்க மாட்டார். நானும் வாங்கி இருக்க மாட்டேன். அண்ணன் அண்ணன்தான்… தம்பி தம்பிதான்” என தெளிவுபடுத்தினார்.
விஜய் ரசிகர்களை தன்வசப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த அவர், “யாருடைய ரசிகர்களையும் யாரும் பிடிக்க முடியாது. எனது 15 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த ரசிகர்களே எனக்கு போதும்” எனக் கூறினார்.
மேலும், “சச்சின், தோனி போன்றவர்களுக்கும் விமர்சனங்கள் வரும். சமூக வலைதள விமர்சனங்களால் யாரும் கோபப்படக் கூடாது” என தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக, ‘மதராஸி’ படத்தில் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜாம்வால், சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறார். “துப்பாக்கி யாரிடம் இருந்தாலும் வில்லன் நான்தான்…” என்ற அவரது வசனம் டிரெய்லரில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் கொடுத்த துப்பாக்கி காட்சி குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மதராஸி டிரெய்லரில் வந்த இந்த வசனமும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.