நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆன்மீகப் புகழ்பெற்ற சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தியாகராஜ சுவாமி திருத்தேரின் வெள்ளோட்டம் இன்று பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. கந்தபுராண வரலாற்றில் மிக முக்கிய இடம்பிடித்த இக்கோவிலில், சிங்காரவேலவர் சூரசம்ஹாரத்திற்காகத் தனது தாயார் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து ‘சக்திவேல்’ பெற்றுச் சென்றதாக ஐதீகம். குறிப்பாக, அன்னை கையால் வேல் வாங்கும்போது சிங்காரவேலவரின் திருமுகத்தில் வியர்வை துளிர்க்கும் ‘வியர்வை சிந்துதல்’ எனும் அதிசயம் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாகும்.
இத்தகைய பெருமை வாய்ந்த ஆலயத்தில் தியாகராஜர் மற்றும் சிங்காரவேலவர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே திருத்தேர்கள் உள்ளன. இதில் தியாகராஜர் சுவாமி வீதியுலா வரும் தேர் கடந்த சில ஆண்டுகளாகப் பழுதடைந்து இருந்ததால், புதிய தேர் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சுமார் 40 டன் எடையுள்ள உயர்தர இலுப்பை மரங்களைக் கொண்டு, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. சிற்பிகளின் அரிய உழைப்பில் 15 அடி உயரத்தில், நுணுக்கமான கலைநயத்துடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு, பிரம்மாண்டமான புதிய தேர் தற்போது முழுமையாக உருப்பெற்றது.
புதிய தேரின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, ஆலய வளாகத்தில் இன்று அதிகாலையிலேயே விக்னேஸ்வர பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீர் அடங்கிய குடங்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுத் தேரின் மீது தெளிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. மகா தீபாராதனைக்குப் பின், ‘ஆரூரா தியாகேசா’ என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, புதிய தேர் அசைந்தாடி வந்தது. மேளதாளங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேரை, வீதியெங்கும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மனமுருகி தரிசனம் செய்தனர். இந்த வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, வரும் விழாக் காலங்களில் தியாகராஜ சுவாமி இந்தப் புதிய தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

















