சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக 22 மணி நேர பயணத்திற்குபின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3:01 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் தரையிறங்கியது.
அமெரிக்காவின், ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து, இப்பணியை செய்து வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘பால்கன் 9’ ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து புறப்பட்டனர். அவர்களை சுமந்து சென்ற, ‘டிராகன்’ விண்கலம், 28 மணி நேர பயணத்திற்குபின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. இதன் வாயிலாக, ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற்றார்.
இதைத்தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். திட்டமிட்டப்படி சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த அக்குழு, மொத்தம் 433 மணி நேரத்தை செலவிட்ட நிலையில், தங்கள் பயணத்தை நிறைவுசெய்து பூமியை நோக்கி டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று மீண்டும் புறப்பட்டனர்.
தொடர்ந்து, 22 மணி நேர பயணத்திற்குபின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3:01 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் டிராகன் விண்கலம் தரையிறங்கியது.
சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பும் நிகழ்வை, லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் நேரலையில் அவரது குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளும் சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்புவதை நேரலையில் பார்த்தனர்.
















