ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்த இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர், சிட்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்ட ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. அந்த போட்டியின் போது அலெக்ஸ் கேரி கொடுத்த கேட்சை ஓடிச் சென்று பிடிக்க முயன்றபோது, ஸ்ரேயஸ் ஐயர் சமநிலை இழந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சிட்னி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஸ்ரேயஸ் ஐயர் இன்னும் சில நாட்கள் சிட்னியிலேயே தங்கி மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பார் என்றும், மருத்துவர்கள் அனுமதி வழங்கிய பின்பு இந்தியா திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரேயஸ் ஐயருக்கு சிறந்த சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ அறிக்கையில் கூறியுள்ளது.
