ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அதன் பாடல்கள், குறிப்பாக ‘மோனிகா’ பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஒட்டி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த பாடலின் உருவாக்கக் காரணம் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
‘விக்ரம்’ வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற மாபெரும் நட்சத்திரப் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை அமைத்துள்ளவர் அனிருத்.
இப்படத்தின் பாடல்களில் ‘மோனிகா’ என்ற பாடல், இணையத்தில் வைரலாகி மூன்று வாரங்களை கடந்தும் டிரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறது. பாடலில் ரஜினி இடம்பெறவில்லை என்றாலும், நடிகை பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடனத்தில் கலக்கியுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், “ரஜினி இல்லாத ‘மோனிகா’ பாடலை ஏன் சேர்த்தீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:
“மோனிகா’ பாடல் வணிக நோக்கத்திற்காக வைக்கப்பட்டது. எனது படங்களில் பொதுவாக ஐட்டம் பாடல்கள் இருப்பதில்லை. ஆனால் இது ஒரு சார்மிங் பாடலாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். படத்தின் கதையை எந்தவிதமாகவும் பாதிக்காமல் இந்த பாடல் சேர்க்கப்பட்டது.
ஜெயிலர் படத்தில் ரஜினி சார் நடனமாடினார், ஆனால் ‘கூலி’யில் அந்த மாதிரியான சூழ்நிலை இல்லை. அதனால்தான் இந்த பாடலில் ரஜினி சார் இடம்பெறவில்லை,” என தெரிவித்தார்.
மேலும் சௌபின் குறித்து லோகேஷ் கூறினார்:
“மோனிகா பாடல் உருவானதற்கான முக்கியக் காரணம் சௌபின் தான். ‘பீஷ்ம பர்வம்’ படத்தில் அவருடைய நடனத்தை பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டேன். பொதுவாக ஒரு ஹீரோ-ஹீரோயின் நடனமாடுவது சகஜம். ஆனால் நடனமாட விரும்பாத வில்லன் ஒருவர் டான்ஸ் ஆடுவதை பார்ப்பது புதிதாக இருக்கும். அந்த புதிய அணுகுமுறையே இந்த பாடலை உருவாக்க வைத்தது.”
இந்த வகையான யோசனைதான் ‘மோனிகா’ பாடலின் தனித்துவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்று லோகேஷ் பகிர்ந்துள்ளார்.
’கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.