இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் தீப்பிடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்வதற்கான விதிகளில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதைப் பற்றி டிஜிசிஏ (DGCA) ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த 19ஆம் தேதி டெல்லியில் இருந்து திமாப்பூர் நோக்கி புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில், பயணியொருவரின் லித்தியம் பேட்டரியுடன் கூடிய பவர் பேங்க் திடீரென தீப்பிடித்தது. அதனை விமான ஊழியர்கள் உடனடியாக அணைத்து, எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து, டிஜிசிஏ விரிவான விசாரணை மேற்கொண்டது. விமானப் பயணங்களில் பயணிகளும், ஊழியர்களும் பவர் பேங்க் போன்ற மின்னணு சாதனங்களை எவ்வாறு கையாளுகின்றனர் என்பதையும் ஆய்வு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்துதல், எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது குறித்து டிஜிசிஏ தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதற்கான விவரங்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இரு தரப்பினரும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இறுதி முடிவை எடுக்கும் நோக்கில் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.















