மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர், முகத்தை மூடிக்கொண்டே சென்றதாக சில ஊடகங்கள் பரப்பிய தகவலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டெல்லியில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை சந்திக்கச் சென்றேன். அதே நாள் இரவு அமித் ஷாவையும் அரசாங்க காரில் சென்று சந்தித்தேன். வெளியே வரும் போது கர்சிப்பால் முகத்தை துடைத்தேன். ஆனால் அதை சில ஊடகங்கள், நான் முகத்தை மறைத்ததாக தவறாக பிரசாரம் செய்தன. இது மிகுந்த வெட்ககரமானதும் வேதனையானதுமாகும்” என்றார்.
அவர் மேலும், “முகத்தை மூடுவதற்கேனும் எனக்குத் தேவையில்லை. நான் வெளிப்படையாகச் சென்றே உள்ளே போனேன். அதேபோல் வெளியே வந்தும் வெளிப்படையாகத்தான் வந்தேன். ஊடகங்கள் இவ்வாறு தரம் தாழ்ந்து அரசியல் செய்வது சரியல்ல. இனி ரெஸ்ட் ரூமுக்கு போனாலும் உங்களுக்குச் சொல்ல வேண்டிய நிலை வரும் போலிருக்கிறது” என கிண்டலாகக் குறிப்பிட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்பாக பழனிசாமி, “நான் முகத்தை மறைத்ததாகக் கூறி முதலமைச்சர் பேசிய விதம் அவருக்கே அழகல்ல. அதிமுக ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டிய அவர், தற்போது முதல்வராகி ரத்தினக் கம்பளம் விரிக்கிறார். நீட் விவகாரத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.
அமித் ஷா சந்திப்பு தொடர்பாக, “அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தலையிடமாட்டேன் என அவர் தெளிவாகவே கூறிவிட்டார். பாஜகவுக்கு அமித் ஷா சொல்வதும், அதிமுகக்கு நான்சொல்வதும் தான் இறுதி. எனவே மீண்டும் மீண்டும் யூகச்செய்திகளை வெளியிட வேண்டாம்” என ஊடகங்களை எச்சரித்தார்.
மேலும், “முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்” என்றும் பழனிசாமி தெரிவித்தார்.
