கொடைக்கானல் எம்.எம்.தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தனது மகளை அழைக்கச் சென்ற தாயை 8-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புஸ்பராஜ். இவரது மனைவி லீமா ரோஸ்லின். இவர்களது மகன் மற்றும் மகள் எம்.எம்.தெரு அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். நேற்று மாலை, 9-ம் வகுப்பு பயிலும் தனது மகளுக்குச் சிறப்பு வகுப்பு முடிந்ததும், அவரை அழைத்துச் செல்வதற்காக லீமா ரோஸ்லின் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
பள்ளி வளாகத்திற்குள் தனது மகளுக்காகக் காத்திருந்தபோது, அங்கிருந்த 8-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென லீமா ரோஸ்லினைச் சூழ்ந்து கொண்டுத் தாக்கத் தொடங்கின. அவர் தனது கையில் இருந்த ‘ஹெல்மெட்டை’ வைத்து நாய்களை விரட்ட முற்பட்டும், நாய்கள் அவரை விடாமல் கடித்துக் குதறின. இதில் அவரது கை, கால் மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த மற்ற பெற்றோர்கள் மற்றும் ஊழியர்கள் நாய்களை விரட்டி அவரை மீட்டனர். பலத்த காயமடைந்த லீமா ரோஸ்லின் தற்போது கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: பள்ளி வளாகத்திற்குள் வெளிநபர்கள் மற்றும் விலங்குகள் நுழையாதவாறு முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை. தெருநாய்கள் மட்டுமன்றி, அவ்வப்போது காட்டெருமைகளும் பள்ளி வளாகத்திற்குள் முகாமிடுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உயிருக்கு அச்சம் நிலவுகிறது. இது குறித்துப் பள்ளி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகம் வளாகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

















