கோவை :
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயண நிகழ்ச்சியில் பிக்பாக்கெட் சம்பவம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபக்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து தனது 21 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
பின்னர், தேக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்களுடன் அவர் சந்திப்பு நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக நிர்வாகிகள் மண்டபத்திற்கு வெளியே காத்திருந்தபோது, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய பொருளாளரான தங்கராஜின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த 1 லட்சம் ரூபாய் மர்ம நபரால் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது. ப்ளேடு பயன்படுத்தி பாக்கெட்டை வெட்டி பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மற்றொரு நிர்வாகியான ஆனந்திடம் இருந்த 1 லட்சம் ரூபாய், அபு என்பவரிடம் இருந்த ₹2,500-வும் திருடப்பட்டுள்ளது.
பணம் திருடியவர் அல்லது குழுவினர் குறித்து எந்தத் தகவலும் இன்னும் வெளிவரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் மன்றத்தில் இருந்த சாட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவின் முக்கிய நிகழ்வில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ள நிலையில், இத்தகைய பிக்பாக்கெட் சம்பவம் கட்சி வட்டாரத்தையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.