திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயப் பிரச்சினைகளைத் தாண்டி தனிநபர் ஒருவரின் தலையீட்டாலும், வனத்துறையினர் மீதான கடுமையான ஊழல் புகார்களாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் இக்கூட்டம், இந்த முறை மோதல் மற்றும் புகார்களின் கூடாரமாக மாறியது. கூட்டத்தின் தொடக்கத்திலேயே, விவசாயிகள் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே பேச வேண்டும் என்றும், இதர தனிப்பட்ட விவகாரங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோட்டாட்சியர் அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், கூட்டத்தில் பங்கேற்ற தனிநபர் ஒருவர், விவசாயம் சாராத ஆக்கிரமிப்புகள் மற்றும் பாதை பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் விவாதித்ததால் சூழல் சூடுபிடித்தது. இதனால் ஆத்திரமடைந்த மலைக்கிராம விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைக்க விடாமல் தடுத்ததைக் கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேற முயன்றனர். உடனடியாக வட்டாட்சியர் தலையிட்டு, விவசாயிகளைச் சமாதானப்படுத்தி மீண்டும் அமர வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கொந்தளித்த விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை அடுக்கடுக்காக முன்வைத்தனர். குறிப்பாக, மன்னவனூர் கிராமத்தில் கூட்டுறவுப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்திய அவர்கள், இல்லையெனில் விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்தனர். மேலும், வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது தங்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், தோட்டக்கலைத் துறையினர் விவசாய உபகரணங்களை முறையாக வழங்குவதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.
அனைத்தையும் விட சிகரமாக, வனத்துறையினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கூட்டத்தையே அதிர வைத்தன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மன்னவனூர் வனப்பகுதியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அளவை விடக் கூடுதலாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், கீழ்நிலை ஊழியர்கள் 4 பேர் மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை விவசாயிகள் கடுமையாகச் சாடினர். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வனப்பாதுகாவலர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியதோடு, அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், வெட்டப்பட்ட மரங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டுகளை (Pass) வனத்துறையினர் 40,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். வருவாய்த் துறையினர் இதனைத் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்த விவசாயிகள், நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில் நடந்த சலசலப்புகளால் அப்பகுதியே சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
