பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு கேப்டனே காரணம் – சோயப் அக்தர் கடும் விமர்சனம்

துபாய் : ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வி குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. முதல் சுற்றில் இலங்கையை வங்கதேசம் வீழ்த்த, இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியா எதிரான ஆட்டத்தில் 200 ரன்கள் எடுக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும், அணி தவறான முடிவுகள் காரணமாக சரிவு கண்டதாக சோயப் அக்தர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், பின்னர் மோசமான பேட்டிங் காரணமாக வீழ்ச்சியடைந்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.

அவர் மேலும், “பாகிஸ்தான் அணியின் கேப்டனே அணியின் மிகப் பெரிய பலவீனம். கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இணைந்து தவறான அணித் தேர்வை செய்ததால் இந்த நிலை ஏற்பட்டது. சல்மான் அகா ஏன் கேப்டனாக உள்ளார் என்பது கூட புரியவில்லை. அவர் மிடில் ஆர்டரில் களமிறங்கும் போது, அணி பலம் பெறுவதற்குப் பதிலாக பலவீனமடைந்து விடுகிறது. இந்த தோல்விக்கு கேப்டனும் பயிற்சியாளரும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்,” என சோயப் அக்தர் தெரிவித்தார்.

Exit mobile version