ஆண்டிபட்டி அருகே பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த நபருக்கு, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

ஆண்டிபட்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை, பள்ளியை முடித்துவிட்டுச் சிறுமியும் அவரது தம்பியும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காட்டில் மேய்ந்து கொண்டிருந்த தங்களது ஆடுகளை மீண்டும் வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக, தனது தம்பி மற்றும் உறவினர் மகனுடன் அருகில் உள்ள செங்கல் காளவாசல் பகுதிக்குச் சிறுமி சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு வந்த டி.சுப்புலாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசன் (37), சிறுமியின் தம்பி மற்றும் உறவினரைத் தந்திரமாகப் பேசி ஆடுகளுக்குத் தழை பறித்து வருமாறு வேறு இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். சிறுமி தனியாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்ட குமரேசன், அவரை வலுக்கட்டாயமாகச் செங்கல் காளவாசல் அருகே மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தமிடவே, அங்கிருந்து குமரேசன் தப்பியோடினார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது தாயாரிடம் கூறி அழுததை அடுத்து, ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பதிவு செய்த போலீசார், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குமரேசனை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைத்து தரப்புச் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி கணேசன், சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உறுதி செய்து குற்றவாளி குமரேசனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.

Exit mobile version