திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுமி ஒருவருக்குப் பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தீவிர விசாரணை நடத்தி பழனி ராசாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (44) என்பவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் நேரடி அறிவுறுத்தலின்படி, இந்த வழக்கில் குற்றவாளிக்கு உரியத் தண்டனை பெற்றுத் தருவதற்காகப் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சரவணகுமாரி அவர்கள் தலைமையிலான குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டனர். நீதிமன்ற நடைமுறைகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நீதிமன்ற முதல் நிலைக் காவலர் திருமதி. இலக்கியா மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பிற்காகத் திறம்பட வாதாடிய அரசு வழக்கறிஞர் திருமதி. மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால், குற்றம் சாட்டப்பட்ட முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பினை வழங்கிய திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றவாளி முருகன் (எ) முருகேசன் என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதல் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் துரிதமாகவும் நேர்த்தியாகவும் செயல்பட்டுத் தண்டனை பெற்றுத் தந்த காவல் துறையினருக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
