மூணாறில் ஆம்புலன்ஸை முடக்கிய கடும் போக்குவரத்து நெரிசல்  ‘இ-பாஸ்’ முறையை அமல்படுத்தக் கோரிக்கை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வார விடுமுறை, பண்டிகை காலங்கள் மற்றும் கோடை சீசன் என ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தவறிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நெரிசல், ஒரு மனித உயிரைப் பறிக்கும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ளது மூணாறு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட்டவடை மற்றும் கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி (35) என்பவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மூணாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜீப்பில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், நகருக்குள் நிலவிய மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் அந்த வாகனம் நீண்ட நேரம் சிக்கிக்கொண்டது. உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போனதால், மாரிசாமி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகம் மூணாறின் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.

இது குறித்து மூணாறு பேக்கரி உரிமையாளர் ராஜா கூறுகையில், “நகரில் வாகனங்களை நிறுத்த முறையான இடவசதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்களின் நடமாட்டம் பாதிக்கப்படுவதோடு, கடைகளில் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது” எனத் தெரிவித்தார். ஆட்டோ ஓட்டுநரான இசக்கி என்பவர் பேசுகையில், “நெரிசல் காரணமாக ஆட்டோக்களை இயக்க முடிவதில்லை, இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களைப் போல மூணாறிலும் ‘இ-பாஸ்’ (e-pass) முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்” என வலியுறுத்தினார்.

அடிமாலி அருகே வசிக்கும் நகைக்கடை உரிமையாளர் ரோயி, தனது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “சாதாரணமாக 45 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை, கடந்த ஒரு வாரமாக நிலவும் நெரிசலால் கடக்க சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகிறது. பெரியவாரை ஜீப் ஸ்டாண்ட் முதல் டி.எஸ்.பி. குடியிருப்பு வரையிலான ஆற்றோரப் பகுதிகளை வாகன நிறுத்துமிடங்களாக மாற்றினால் நெரிசலைத் தவிர்க்கலாம். மேலும், சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை ஒழுங்குபடுத்துவது அவசியம்” என்றார். மூணாறின் இயற்கை எழிலை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுக்காமல், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு போக்குவரத்தைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Exit mobile version