பாகிஸ்தானுடன் உள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்ததை அடுத்து, அதன் உபரி நீரை பகிர்வது தொடர்பாக காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு நீர் வழங்குவதை இந்தியா நிறுத்தியது. இதனால், சிந்து நதியின் கிளை நதிகள் மூலமாக கிடைக்கும் நீரை 113 கிலோமீட்டர் நீள குருக்கை வாய்க்கால் தோண்டி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், “தங்களே கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் உள்ளோம். முதலில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்; அதன் பிறகு தான் மற்ற மாநிலங்களுக்கு நீர் பகிர்வை யோசிக்க முடியும்,” என ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பஞ்சாப் முதல்வர், “சிந்து நதியின் கிளை நதிகளில் பஞ்சாபுக்கும் உரிமை உண்டு,” என வலியுறுத்தினார். பஞ்சாபிலுள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ், மற்றும் ஷிரோமணி அகாலி தளக் கட்சிகளும் காஷ்மீர் முதல்வரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் மத்திய அரசுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான நீர் பகிர்வு திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.