முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மோசடி வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதிக்க திமுக அரசு உள்நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :
“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடுக்கப்பட்ட மோசடி வழக்கில், பாதிக்கப்பட்ட 2000 பேரையே குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்திருப்பது, வழக்கின் விசாரணையை நிரந்தரமாகக் கெட்டிகட்டும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இதற்கு முழுப்பொறுப்பு சட்டம் ஒழுங்கு துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது செல்லும்.”
மேலும் அவர் கூறியதாவது :
“செந்தில் பாலாஜி செய்த ஊழலை பா.ம.க. ஏற்கனவே பலமுறை வெளிக்கொணந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரில், அவரை ‘தியாகி’ என புகழ்ந்து, மீண்டும் அமைச்சராக நியமித்ததன் மூலம், திமுக அரசு ஊழலை ஏற்றுக்கொண்டது. இதையும் பா.ம.க. கண்டித்தது.”
“தமது தவறான செயலில் இருந்து திருந்தாமல், மக்களின் நலன்களையே புறக்கணித்து, செந்தில் பாலாஜியை காக்க முயற்சிக்கும் ஸ்டாலின், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
முடிவாக, “ஊழலில் ஏமாற்றப்பட்டவர்களை வழக்கிலிருந்து நீக்கி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது உள்ள வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.