“மோடி அரசு கடினமாக பணியாற்றி வருகிறது. நல்ல செயல்பாடுகளை செய்து வருகிறது” என மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் மகன் பைசல் பட்டேல் பாராட்டினார்.
காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்ததுடன், குஜராத்தின் பருச்சிலிருந்து மூன்று முறை லோக்சபா உறுப்பினராகவும், மூன்று தசாப்தங்களுக்கு ராஜ்யசபா எம்பியாகவும் பணியாற்றியவர் அகமது பட்டேல். 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்தார்.
அவரது மகன் பைசல் பட்டேல், தற்போது காங்கிரஸ் கட்சிக்கான பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததில், “என் தந்தை நாடு, கட்சி மற்றும் சோனியா குடும்பத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். நானும் அவரது வழியில் செல்ல முயன்றேன். மனிதகுலத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவேன். காங்கிரஸ் எப்போதும் எனது குடும்பமாகவே இருக்கும். நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை, பொதுஜன வாழ்க்கையில் இருந்து ஒரு இடைவேளை எடுத்துள்ளேன்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையைப் பாராட்டிய அவர், “நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆயுதப்படைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. மோடி சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி, பெரிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டார். வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீது எனக்கு பெருமை உண்டு. திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தலைவர்களாக மாற்றி, அமைச்சர் பதவிகளில் அமர்த்தும் மோடியின் திறமை சிறப்பு” என கூறினார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடின உழைப்பாளி எனவும், சசி தரூர், டி.கே. சிவகுமார், ரேவந்த் ரெட்டி, தீபேந்திர ஹூடா, சச்சின் பைலட் ஆகியோர் மிகுந்த திறமையான தலைவர்கள் எனவும் அவர் பாராட்டினார். “கட்சியின் உள்பிரச்சினைகளுக்கு, மூத்த தலைவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கப்படவில்லை; தற்போதைய ஆலோசகர்கள் சிறப்பாக செயல்படவில்லை” என்றும் அவர் விமர்சித்தார்.