சென்னை :
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் சமீபத்தில் வழங்கிய பேட்டியைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
“செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை. அவர் மீது எந்த தவறும் கிடையாது” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
செங்கோட்டையன் பேட்டியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியிருப்பதைப் பற்றி, “இதில் கலகம் என்ன இருக்கிறது எனக்கு புரியவில்லை. அவர் எப்போதும் ஒற்றுமைக்காகவே பேசுகிறார். இபிஎஸ்க்கு எதிராக அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை. ‘இபிஎஸ் தலைவராக இருக்கக் கூடாது’ என்றும் கூறவில்லை. மாறாக, இபிஎஸ் தலைமையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அது அவருக்குப் பெருமையே” என்றார்.
மேலும், “இபிஎஸை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட ஒன்றிணைந்து அவரை ஏற்றுக்கொண்டால் கட்சிக்கே நன்மை. உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை கட்சியில் சேர்த்து கொண்டு, அவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் தான் அது கலகக்குரல். ஆனால் செங்கோட்டையன் அப்படிப் பேசியதாக எனக்கு தோன்றவில்லை” என்று குருமூர்த்தி விளக்கினார்.
அத்துடன், “எல்லோரும் ஒன்றிணைந்தால் கட்சிக்கு நல்லது என்பதை இபிஎஸும் அறிவார். ஆனால், ‘எல்லோரும் ஒன்றிணைந்தால் தனக்கு நல்லதா?’ என்று அவர் யோசிக்கிறார். இதுதான் எனக்கும், இபிஎஸுக்கும் உள்ள கருத்து வேறுபாடு” எனவும் அவர் தெரிவித்தார்.

















