ஈரோடு பெருந்துறையில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் செங்கோட்டையன் உறுதி

கரூர் வேலுச்சாமிபுரம் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்ட நிலையில், அவரது அடுத்தகட்டப் பயணம் வரும் டிசம்பர் 18-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற வுள்ளது.விஜய்யின் பிரசாரக் கூட்டம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகில், விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நடத்துவதற்குத் தவெக சார்பில் காவல்துறை அனுமதி கோரப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானதால், கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தச் சூழலில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், தற்போது தவெக-வின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப் பாளருமான செங்கோட்டையன், நேற்று கூட்டம் நடைபெற உள்ள இடத்தைப் பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், வரும் 18-ம் தேதி காலை 11:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. திட்டமிட்டபடி பிரசாரக் கூட்டம் இங்கு நிச்சயமாக நடக்கும்.” இடம் ஒதுக்குவது குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த செங்கோட்டையன், “இங்கு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, இந்து சமய அறநிலையத் துறையினர் காவல்துறையினரிடம் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார். மேலும், கட்சிக்குள் தனக்கு உள்ள செல்வாக்கு குறித்துப் பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரிடம் எனக்கு எப்படிச் செல்வாக்கு இருந்ததோ, அதே போலத்தான் த.வெ.க.விலும் எனக்கு உள்ளது” என்று உறுதியுடன் கூறினார்.

Exit mobile version