மதுரை மேற்குத் தொகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் செல்லூர் கே. ராஜூ!

மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி, மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சியாக, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூடல் நகர் பகுதியில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கூடல் நகர் பேருந்து நிலையத்திற்கு எதிரே, சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தப் புதிய பாலத்தை, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ இன்று காலை ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

கூடல் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்த இந்தப் பாலமானது, அப்பகுதி மக்களின் நீண்ட காலத் துயரைத் துடைக்கும் ஒரு முக்கியத் திட்டமாகக் கருதப்படுகிறது. திறப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போதும் சரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணிகளில் தொய்வில்லாமல் ஈடுபட்டு வருவதாகவும், தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு இணையாக மக்கள் சேவையில் போட்டி போட்டுக்கொண்டு பணியாற்றி வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த விழாவில் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ். பாண்டியன், பா. குமார், திரவியம், உசிலை பேராசிரியர் ஜெயபால், ஜெயவேல், வி.பி.ஆர் செல்வகுமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். புதிய பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் இனி சிரமமின்றி பேருந்து நிலையத்தை அணுக முடியும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழாவின் நிறைவாக அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. மதுரை மேற்குத் தொகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version