சென்னை :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூகநீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக செய்திருந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவு செய்த அவர், “கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என்று நினைக்கும். அதுபோல், சீமான் தன்னைத் தவிர தமிழகத்தில் யாரும் போராடுவதில்லை என்று பிதற்றுகிறார். இது தன்னலை, தற்பெருமை கூடிய தவறான அணுகுமுறை,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ரிதன்யா சம்பவத்தில் மாதர் சங்கம் எழுப்பிய குரல், கிணற்றுக்குள் இருக்கும் சீமான் தவளைக்கு கேட்காமல் போயிருக்கலாம்,” என்றார்.
இதற்கு முந்தைய நாள், செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
“ரிதன்யா தற்கொலைக்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை. அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மனித உரிமை இயக்கங்கள், எழுத்தாளர்கள், மாதர் சங்கங்கள், பெண்ணியவாதிகள் – எல்லோரும் எங்கே சென்றீர்கள்? கொக்கைன், கஞ்சா, டாஸ்மாக் சரக்கைக் குடித்துவிட்டு படுத்துவிட்டீர்களா?”
எனக் கடுமையாக பேசினார்.
அவரது இந்தக் கருத்துகளுக்கு எதிர்வினையாகவே, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மேற்கண்ட பதிலை அளித்துள்ளார்.