நவீன தமிழகத்தின் சிற்பி, முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் திருமங்கலம் தொகுதி முழுவதும் எழுச்சிமிகு மக்கள் சேவைத் திட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் அவர்களின் சீரிய ஏற்பாட்டில், இத்தொகுதியில் உள்ள ஒன்றரை லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இடைவிடாது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருமங்கலம் நகர் சோழவந்தான் சாலையில் உள்ள பனை மரம் ஸ்டாப் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஒரே நாளில் 4 ஆயிரம் பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருமங்கலம் நகர் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, நகர்மன்றத் தலைவர் மு.ரம்யா முத்துக்குமார் முன்னிலை வகிக்க, நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் அனைவரையும் வரவேற்றார்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அலைகடலெனத் திரண்டிருந்த இந்த விழாவில், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் மற்றும் அவரது துணைவியார் பாரதி மணிமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைத் தங்கள் கரங்களால் நேரடியாக வழங்கினர். விழாவில் ஆவேசமாக உரையாற்றிய சேடபட்டி மு.மணிமாறன், “திருமங்கலம் எப்போதும் தி.மு.க.வின் கோட்டையாகத் திகழ்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிச் சாதனை படைத்துள்ளார். குறிப்பாக, பெண்களுக்கான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என இது பெண்களுக்கான ஆட்சியாக நடைபெற்று வருகிறது. திருமங்கலம் தொகுதியின் வளர்ச்சிக்காக 23 கோடியில் ரயில்வே மேம்பாலம், 58 கோடியில் புதிய குடிநீர் திட்டம் எனப் பல்வேறு மெகா திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் முடங்கிக் கிடந்த பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளதால், திருமங்கலம் விரைவில் சொர்க்க பூமியாக மாறும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அரசியல் களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமையைக் குறிப்பிட்ட அவர், “டெல்லியில் இருந்து மோடி தலைமையில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும், தமிழக முதல்வரையும் தி.மு.க.வையும் யாராலும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது. மக்களின் பேராதரவுடன் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி” என்று சூளுரைத்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விழாவிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிக்கன் பிரியாணியுடன் கூடிய அறுசுவை அசைவ விருந்து வழங்கப்பட்டது. இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், நகர்ப்புற இளைஞர்களுக்குக் கிரிக்கெட் மற்றும் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களைச் செயலாளர் மணிமாறன் வழங்கி வாழ்த்தினார்.
இந்த விழாவில் தொகுதி மேலிடப் பார்வையாளர் டிஸ்கோ அலாவுதீன், முன்னாள் எம்.எல்.ஏ லதா அதியமான், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மதன்குமார், நாகராஜன், ஆலம்பட்டி சண்முகம், முத்துராமன், பேரூர் செயலாளர் வருசை முகமது மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் எனப் பெரும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருமங்கலம் நகரை விழாக்கோலம் பூணச் செய்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, தி.மு.க.வின் மக்கள் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

















