பிள்ளையார்பட்டியில் பாதுகாப்புத் திட்டமிடல் தோல்வி 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பக்தர்கள்

சிவகங்கை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், முறையான பாதுகாப்புத் திட்டமிடல் மற்றும் கூட்ட மேலாண்மை இல்லாத காரணத்தால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வழக்கமான பாதைகளுடன் கூடுதலாகப் புதிய பாதைகளிலும் வாகனங்களை அனுமதித்ததே இந்தக் குளறுபடிகளுக்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று பிள்ளையார்பட்டிக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். வழக்கமாகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு வரும் சாலை மற்றும் கோயில் முன்புறச் சாலை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை கூடுதலாக நான்கு வழிச்சாலை வழியாகவும் பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் மருதங்குடி சாலை மற்றும் மலைக்கு பின்புறம் வழியாகத் திரளான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். அங்கு போதிய அளவில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், உற்சாக மிகுதியில் இருந்த பக்தர்கள் வரிசைக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறிக் குதித்துச் சென்றனர். இதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் அங்கிருந்த ஒரு சில போலீசார் திணறினர்.

வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் அலைமோதியதால், கோயிலில் உள்ள நிழற்கொட்டகையுடன் கூடிய வரிசைகள் காலை முதல் மாலை வரை நிரம்பி வழிந்தன. குறிப்பாகக் கோயில் கிழக்கு நுழைவு வாயில் அருகேயும், சிறப்புத் தரிசனத்திற்கான வரிசையிலும் பக்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அந்த நுழைவு வாயில் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனை முறைப்படுத்தப் போதிய காவலர்கள் இல்லாததால், அங்கு நின்றிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மலைக்கு பின்புறம் உள்ள சிறப்புத் தரிசன வரிசை வழியாக அனைத்துப் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், உள்ளே சென்ற பக்தர்களை விரைவாகத் தரிசனம் செய்து வெளியேற்றத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதன் விளைவாக, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. முறையான திட்டமிடல் இருந்திருந்தால் இதுபோன்ற நெரிசலைத் தவிர்த்திருக்கலாம் என வருத்தத்துடன் தெரிவித்த பக்தர்கள், வருங்காலங்களில் இது போன்ற விசேஷ நாட்களில் கூடுதல் போலீசாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version