மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகே அமைந்துள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், தற்போது பெரும் சட்டப் போராட்டமாகவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து அண்மையில் உத்தரவிட்டிருந்தார். மேலும், தேவைப்பட்டால் நீதிமன்றப் பாதுகாப்பில் உள்ள சிஐஎஸ்எஃப் (CISF) வீரர்களின் உதவியுடன் சென்று தீபத்தை ஏற்றலாம் என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த உத்தரவு ஒரு தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றாலும், மற்றொரு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்று திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முற்பட்டபோது, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் திடீரெனக் கலவரம் வெடித்தது. இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு தர்கா அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முயன்ற இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். நிலைமை விபரீதமாவதைத் தடுக்கவும், பொது அமைதியைப் பேணவும் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதனால் அப்பகுதி முழுவதும் காவல்துறையின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்குலையக் காரணமாக இருப்பதாகவும் கூறி தமிழக அரசு தரப்பில் அவசர மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வில் முறையீடு செய்து, இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரினார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இது தொடர்பான வழக்கை நாளை முதல் வழக்காக (First Case) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தாலும், “தற்போது 144 தடை உத்தரவு மட்டுமே நடைமுறையில் உள்ளது; எனவே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், குறைந்தபட்சம் மூன்று நபர்களையாவது மலைக்கு மேல் சென்று தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்” என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், “வழக்கு தற்போது மேல்முறையீட்டில் இருப்பதாலும், மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு அமலில் இருப்பதாலும் யாரையும் அனுமதிக்க முடியாது” என்பதில் போலீசார் உறுதியாக இருந்தனர். மதச் சார்பற்ற ஒரு நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான இத்தகைய சிக்கல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
