பீஜிங்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை கடுமையாகக் கண்டித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்புநாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
சீனாவின் தியான்ஜினில் நேற்று தொடங்கிய எஸ்சிஓ மாநாடு இன்று நிறைவு பெற்றது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.
மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது.
மாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,
“பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை எஸ்சிஓ உறுப்பு நாடுகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. பயங்கரவாதம் எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதனை எதிர்த்து போராட சர்வதேச சமூகமே ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.