நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நேற்று நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பேருந்து நிலைய மேற்கூரை விவகாரத்தை முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் வார்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
வெளியே வந்த அதிமுக கவுன்சிலர் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக நவீன மேற்கூரை அமைக்கப்பட்டது. பாலம் கட்டும் பணிகளுக்காக அந்த மேற்கூரை தற்காலிகமாக அகற்றப்பட்டது. தற்போது பாலம் பணிகள் முடிவடைந்த பின்னரும், மீண்டும் மேற்கூரையை அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இப்பணி முடக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்,” எனக் குற்றம் சாட்டினார்.
கூட்டத்திற்குத் திரும்பிய பின்னர் நடைபெற்ற விவாதத்தில், அதிமுக கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், “நகரசபைக் கூட்டங்களில் வார்டு வாரியாகப் பெறப்பட்ட மனுக்கள் மீது இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விளக்கத்தை நிர்வாகம் அளிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். மற்றொரு அதிமுக கவுன்சிலரான சரவணன், “பெரியார் நகர் பகுதியில் திறந்தவெளியில் கும்பலாக மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்கள் காலி பாட்டில்களைச் சாலைகளில் போட்டு உடைப்பதாலும், தகராறுகளில் ஈடுபடுவதாலும் அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது,” எனப் புகார் வாசித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய நகராட்சித் தலைவர் செல்வராஜ், “கவுன்சிலர்கள் முன்வைக்கும் நியாயமான புகார்கள் மற்றும் வார்டு பிரச்சினைகள் மீது அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். சேதமடைந்த சாலைகள் விரைந்து சீரமைக்கப்படும். பெரியார் நகரில் சமூக விரோதச் செயல்களைத் தடுக்கவும், மது அருந்துபவர்கள் வராதபடியும் பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அனைத்து வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என உறுதியளித்தார். நகர்மன்ற உறுப்பினர்களின் காரசாரமான வாதப் பிரதிவாதங்களுடன் இந்தக் கூட்டம் நிறைவு பெற்றது.
